வியாழன், 23 ஜனவரி, 2020

ஜனவரி 23,
வரலாற்றில் இன்று.

தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று (1957).



1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கான "தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்" சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆட்சி மொழி என்றால் என்ன.?

அரசு அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழியே ஆட்சி மொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழி சட்டம்:

தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது தமிழ். எனவே தமிழ்நாட்டில் (அப்போது சென்னை மாகாணம்) தமிழ் தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தச் சட்டம் 1957ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவுப்படி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் தான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

ஆட்சிமொழிக் குழு அமைப்பு:

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசால், ஆட்சிமொழிக் குழு 1957ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ் வளர்ச்சித் துறை:

அரசு அலுவலகங்களில் விதிகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் உருவானது. எனவே தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறை அமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகள்:

தமிழ் வளர்ச்சித் துறையின் மிக முக்கிய பணி தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னரே, சோதனை முறையில் 1951-ஆம் ஆண்டிலேயே திருச்சி நகராட்சியில் ஆட்சி மொழியாக தமிழ் பயன்படுத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.